வாக்களிக்க முடியாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

அத்தியாவசிய கடமையில் ஈடுப்படுவோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் போன்றோர் இந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு முழுமையாக வாக்களிக்கும் உரிமைக்கான நடைமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான நடைமுறை திட்டத்தை வகுப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் தெரிவு குழுவை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த தெரிவுக்குழுவின் பணிகள் ஆரம்பமாகும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக விசேடமாக குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சட்ட ரீதியில் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை.

இதேபோன்று இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுப்பட்டுள்ளோர், சுகாதார பிரிவை சேர்ந்தவர்கள் நாளந்தம் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறானோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பமும் இல்லை. சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கும் இதேநிலையே. இதேபோன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் போன்றோர் வாக்களிப்பில் பங்குகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். தேர்தல் நடக்கும் போது இவர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கின்றனர். இவர்களுக்கு எவ்வாறு தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கமுடியும் என்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.

அதாவது வாக்களிப்பு இடம்பெறும் தினத்திற்கு முதல் நாள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது சில திருத்தங்கள் தொடர்பில் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டங்களை சட்டமாக்குவதற்காக பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதமர் உடன்பட்டுள்ளார். இந்த தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

x