தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 3 வான்கதவுகள் திறப்பு

நேற்றும் இன்று காலையும் பல பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக இராஜாங்கனை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்கள் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு மூவாயிரத்து 700 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 3 வான்கதவுகள் இரண்டு அடி அளவிற்கு திறந்து செக்கனுக்கு 5 ஆயிரத்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் சிலாபம் வரையான தெதுறு ஓயாவை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

இன்றிரவு மேலும் மழை பெய்தால் தெதுறு ஓயாவின் மேலதிக வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்