பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம்

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் குறித்து அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

மின்சார சபையில் சில திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் வேலைத்திட்டம் இந்த ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை ரத்து செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஒரு காரணமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சேவை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு துரிதமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நாம் ஒரு வருட காலமாக அவதானித்தோம். திட்டங்கள் தொடர்பிலான கால தாமதம் இடம்பெறுவதை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது. சட்ட ரீதியில் மீண்டும் இவ்வாறான ஒன்றை நியமிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேபோன்று இந்த செயற்பாட்டு விடயங்களை நீதியான முறையில்; நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமக்கு மக்கள் 3/2 பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் எதிர்க்கொள்ளப்பட்டால் அதற்கு மாற்றீட்டு நடவடிக்கை மேற்கொள்வது முக்கியமானதாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிலைமையைக் கருத்திற் கொண்டு இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நெருக்கடி இல்லாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அன்ரிஜன் பரிசோதனை சில இடங்களில் மேற்கொள்ளப்படும். நுவரெலியா உள்ளிட்ட மலையகப் பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொவிட் தொற்று தொடர்பான பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர் ஹோட்டல்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

x