சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையினை கொண்டாடுமாறு கோரிக்கை

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையினை கொண்டாடுமாறு யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருட நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அருட்தந்தை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருடம் நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச் சபைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு இந்த அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 நோய்த் தொற்று காரணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல், ஒளிவிழா என்பனவும், நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகளும் ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளன.

நத்தார் தினத்தன்று காலை 7.30 மணிக்கு திருப்பலியானது சமூக இடைவெளிகளையும் சுகாதார முறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x