இரணைமடு குளத்தின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

இரணைமடு குளத்தின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையுடன் தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில் இந்த வெள்ளபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முரசுமோட்டை, பன்னங்கண்டி, மருதநகர், ஊரியான், கண்டாவளை மற்றும் கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் மழை வீழ்ச்சியின் தன்மையை பொறுத்து இன்று மாலை அல்லது நாளை வான் கதவுகள் திறப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கோறளைபற்று பிரதேச செயலக பிரிவில் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிரான் கோறளைபற்று தெற்கு பிரதேசம் தற்போது நீரில் மூழகியுள்ள நிலையில் மக்கள் போக்குவரத்திற்காக கடற்படையினரின் படகுகளும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் படகுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு நகர்பகுதிகளான கூளாவடி. ஊறணி, இருதயபுரம் உட்பட பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் கடற்றொழில் நடவடிக்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அதிக மழையுடனான காலநிலையுடன் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.

தலா 2 அடி அளவில் இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் விநாடிக்கு 1214 கனஅடி நீர் கலாவாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியல் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தம்புலுஓயாவில் இருந்து விநாடிக்கு 8000 கன அடி நீர் கலா வாவியில் சேர்வதால் இன்று இரவு அந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக கலாவாவி நீர்பாசன பொறியியல் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.