சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றினால் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியும்

பொதுமக்கள் தொடர்ச்சியாக நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட்டால் அந்தப் பிரதேசத்தை வெகுவிரைவில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கமைய செயற்படாவிட்டால், அந்தப் பிரதேசத்தை நீண்டகாலம் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பி.சி.ஆர் அல்லது எண்ரிஜன் பரிசோதனைக்கு மாதிரிகள் கோரப்பட்டால், மறுப்பு தெரிவிக்காமல் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

கொழும்பு நகரில் 9 காவல்துறை அதிகார பிரிவுகளிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் 32 கிராமசேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நீங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேற முடியாது.

எவராவது வெளியேறுவாராயின், தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தனிமைப்படுத்தல் பகுதிக்கு வெளியே உள்ளவர்களும் இயன்றளவு நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக வீட்டிலிருந்து கடைத் தொகுதிகளுக்கு அல்லது வேறு பகுதிகளுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணி தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நேற்றைய தினம் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதமை தொடர்பில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் ஆயிரத்து 611 பேரளவில் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

x