குடியிருக்கும் காணிகளை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை

வவுனியா, குட்செட், அம்மாபகவான் வீதி மக்கள் தாம் குடியிருக்கும் குளத்தின் அலகரையை அண்டியுள்ள காணிகளை தமக்கே பெற்றுத் தருமாறு கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

வவுனியா, குட்செட் அம்மாபகவான் வீதிப் பகுதிக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானா கு.திலீபன் ஆகியோர் மக்களின் அழைப்பின் பேரில் இன்று (20.12) விஜயம் செய்தனர்.

அம்மாபகவான் வீதியில் வைரவபுளியங்குளம் குளத்தின் அலகரையை உள்ளடக்கியதாக மக்கள் குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் அம் மக்களை அக் காணியில் இருந்து வெளியேறுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அக் காணிகள் தொடர்பில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காணிகளை தாம் பெற்று 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்பதாக தெரிவித்துள்ள கிராம மக்கள் தமது காணிகளை விடுவித்து தமக்கான காணிப்பத்திரத்தை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் பேசி விரைவில் சாதமான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதாக இதன்போது வாக்குறுதியளித்தார்.

அத்துடன், மக்களது குடிமனைகள் மற்றும் வைரவபுளியங்குளம் என்பவற்றையும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பார்வையிட்டு இருந்தனர்.

x