தேயிலை மலைப்பகுதிகளில் ஓய்வு அறை

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். சம்பளம் மாத்திரம் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை , கொமர்ஷியல் பகுதியில் ஈர நில பூங்கா வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சின் 130 மிலிலியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டவுள்ள இத் திட்டத்தில் வனஜீவாரசிகள் அமைச்சர் சீ.பி.ரட்நாயக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்ட இந் நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெருந்தோட்ட தொழில் கேவலமானதல்ல தொழில்துறையை நடத்தும் முறையே கேவலமானது. கௌரவமாக நவீனமுறையில் தேயிலை தொழிற்துறையை முன்னெடுத்தால் தொழிலாளர்கள் இத்துறையிலிருந்து வெளியேற மாட்டார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 435 தோட்ட பிரிவுகள் காணப்படுகிறது . அத்தனை பிரிவுகளிலும் தேயிலை மலைப்பகுதிகளில் ஓய்வு அறை அமைக்கப்படும். அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் கொச்சைப்படுத்துகின்றனர் . அது எனக்கு அவசியமற்றது. தொழிலாளர்களின் நலன் கருதி திட்டத்தை முன்னெடுப்பேன். அதே போல எனது அமைச்சினூடாக வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. விரைவில் இந்திய வீட்டுத்திட்டமும் ஆரம்பிக்கப்படும். மேலும் மலையக பல்கலைகழகம் இல்லை என்று பலர் குறைகூறித்திரிந்தார்கள். இப்போது இடம் ஒதுக்கி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கே குறைகூறியவர்கள் ஏன் பாராட்டவில்லை என்றார்.

அத்தோடு நான் அமைச்சுப்பதவியை பெற்ற காலம் மிகவும் கஸ்ட காலம் . உலகமே கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ள காலம் இருப்பினும் ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்புடன் மக்களுக்கு தேவையான விடயங்களை முன்னெடுப்பேன் .

அதுபோலத்தான் இந்த ஈரநில பூங்கா எனும் இத்திட்டம் ஆரம்பிப்பதால் மேலும் பல அபிவிருத்திகளை எதிர்காலத்தில் இதன் மூலம் இப்பிரதேசத்தில் முன்னெடுக்க வாய்ப்புகள் உண்டு என்றார்.

x