சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்ட கஞ்சா இலைக்கு இணையான ஒரு தொகை இலை

சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்பபடும் கஞ்சா இலைக்கு இணையான ஒரு தொகை இலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதி சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இருந்து அஞ்சல் பொதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த இலையின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலை மயிர் கருமையாக்குவதற்காக பயன்படுத்தப்படும் வர்ணம் என கூறி கண்டி – அக்குறனை பகுதியை சேர்ந்த ஒருவரின் முகவரிக்கு குறித்த இலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொதியின் உரிமையாளர் அதனை பெற்றுக் கொள்ள வந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருள் இலை தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த இலை தொகை போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.