அரசாங்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை

எம்.சீ.சீ. என்ற மில்லேனியம் சவால்கள் ஒத்துழைப்பு உடன்டிக்கை தொடர்பாக தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், அப்போதைய பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க அவசரமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாதிடும் யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தபோது, பெரும் எதிர்ப்பலை எழுந்திருந்தது.

நடப்பு அரசாங்கம் இது குறித்து அமெரிக்காவுடன் பேசுவதாக தெரிவித்து வந்தபோதும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை

இந்த நிலையில், இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த உடன்படிக்கையின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கை ஊடாக கிடைக்கின்ற 480 மில்லியன் டொலர்களை விட, நாடும் மக்களும் இந்த அரசாங்கத்துக்கு முக்கியம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை துரிதப்படுத்தவே அவர் விஜயம் செய்வதாக கூறப்பட்டது.

ஆனால் அதன் உண்மைத்தன்மை தற்போது புரிந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.