குளவி கொட்டுக்கு இலக்கான பெண்கள் கவலைக்கிடம்!

பதுளை, அப்புத்தளை பகுதியின் அப்புத்தளை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலைத் தளிர்களை கொய்து கொண்டிருந்த பத்து பெண் தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (19) மதியம் ஹப்புத்தளை பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குளவிக் கொட்டுக்கிலக்கான பத்து பெண் தொழிலாளர்களும், ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பெண் தொழிலாளர்கள் தொழில் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மரமொன்றிலிருந்து குளவிக்கூடு கலைந்து, கடமைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கொட்டத் தொடங்கின. உடனடியாக அத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் மூலம் வாகனமொன்றில் ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஹப்புத்தளைப் பகுதியின் பங்கட்டி என்ற பெருந்தோட்டத்தில் ஆண் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.