யாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழந்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழக்க நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் இன்றைய தினம் மாநகர முதல்வரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், சிறி லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் சிறி லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ்ப்பாண மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 2ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
x