வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள 06 விடயங்களை பின்பற்றி உரிய வகையில் இவர்கள் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் பின்வரும் 06 சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும்.

1. நாட்டிற்குள் வந்த பின்னர் முதல் நாளில் அடிப்படை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. அரசாங்க சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திற்குள், அவர்கள் தனி அறையில் அல்லது இரண்டு பேர் சேர்ந்த அறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. இந்த அறையில் தனியான இயற்கை கழிவறை வசதிகள் இருக்க வேண்டும் என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்களுடன் இணைந்து பயன்படுத்தக்கூடாது.

4. தனிமைப்படுத்தல் காலத்திற்குள் எந்த வகையிலும் தனிமைப்பட்டுள்ள ஏனையவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேனவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 12 – 14 ஆவது நாட்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாவதுடன், அதன் முடிவுகள் எதிர்மறையாக (Negative) இருக்க வேண்டும்.

6. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கால முடிவின் போது அந்த நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி குறித்த நபரின் தனிமைப்படுத்தல் செயல்முறையில் திருப்தி அடைய வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட அடிப்படை விடயங்களையும் முழுமையாக பூர்த்தி செய்த நபர், மீண்டும் தமது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.