சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளரிடம் இரண்டாவது தினமாகவும் பெறப்பட்ட சாட்சியப் பதிவுகள்…

சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷிக், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது தினமாகவும் முன்னிலையானார்.

தற்போது நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரை, கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு பலவந்தமாக திருமணம் செய்து வைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உரிய முறைமையின்றி அப்துல் ராஷிக் என்பவரால் அந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ள அரச சட்டவாதி, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட அஸ்துன் என்பவரை நீங்கள் அறிந்திருந்தீர்களா என வினவினார்.

இதற்கு பதிலளித்த அப்துல் ராஷிக் அவரை அறிந்திருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் திருமணம் செய்திருந்த சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரனை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என சாட்சியாளரிடம் அரச சட்டவாதி கேள்வி எழுப்பினார்.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி அவரை முதன்முறையாக கண்டதாகவும், கிழக்கு மாகாணத்திலிருந்து அஸ்துனுடன் மாளிகாவத்தையில் உள்ள தங்களது பிரதான அலுவலகத்திற்கு அவர் வந்ததாகவும் சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அஸ்துன் அவரை குறித்த சந்தர்ப்பத்தில் திருமணம் செய்திருந்தாரா? என அரச சட்டவாதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு இல்லை என பதிலளித்த சாட்சியாளர், புலஸ்தினியை இஸ்லாமியராக மதம் மாற்ற வேண்டும் என அஸ்துன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது சிறந்த நண்பர் என்றும், முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு புலஸ்தினி விருப்பத்துடன் உள்ளதாகவும் அஸ்துன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாங்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு புலஸ்தினியை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, சாரா ஜெஸ்மின் என பெயரிட்டு அவருக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கியதாகவும் சாட்சியாளரான அப்துர் ராஷிக் ஆணைக்குழுவில் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னதாக ஆணைக்குழுவில் நீண்ட சாட்சியத்தை வழங்கியிருந்த சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயார், அப்துல் ராஷிக் என்பவர் புலஸ்தினியை அஸ்துன்னுக்கு பலவந்தமாக திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது மகள் தொடர்பில் எந்த ஒரு தகவலையும் தன்னால் அறிய முடியாதிருந்ததாக புலஸ்தினியின் தாயார் ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.

இந்த நிலையில், சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பிய அரச சட்டவாதி, புலஸ்தினி தற்போது எங்கு இருக்கிறார் என வினவினார்.

இதற்கு பதிலளித்த சாட்சியாளரான அப்துல் ராஷிக் தனக்கு தெரியாது என குறிப்பிட்டார்.