தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. சுகாதார வசதிகள் இல்லை. தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு உரிய வகையிலான கல்வி கட்டமைப்பு இல்லை. மாத சம்பளத்தை பெறுவதற்கான உரிமை இருந்தும் நாட்கூலிகளாகவே நடத்தப்படுகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். நாட்டில் ஏனைய பிரஜைகளுக்குள்ள உரிமை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என அரசாங்கங்கள் உறுதிமொழி வழங்கியிருந்தாலும் இன்னும் அது வழங்கப்படவில்லை. சட்டபூர்வமான பத்திரத்துக்கு பதிலாக மாற்று பத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்படுகின்றது. அது அடிப்படை சம்பளம் இல்லை. தற்போது ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அந்ததொகைகூட போதாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஆயிரத்து 281 ரூபா வழங்கப்படவேண்டும்.

2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் பட்ஜட்டில் முன்மொழிந்துள்ளது. ஆனால் தோட்டக் கம்பனிகள் இணங்கினால்தான் இந்த சம்பள உயர்வு கிடைக்கும். அவ்வாறு இணங்காவிட்டால் கிடைக்காது. கம்பனிகள் இணங்காவிட்டாலும் அந்த தொகையை அரசாங்கம் வழங்குவதற்கான நிதி பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லை. கம்பனிகள் சுவீகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. எது எப்படியிருந்தாலும் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

அதேவேளை தோட்டத்தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணி உரிமை, சம்பள உரிமை ஆகியன உறுதிப்படுத்தப்படவேண்டும். சுகாதார உரிமை, பிள்ளைகளுக்கான கல்வி உரிமை ஆகியனவும் வழங்கப்படவேண்டும் என்றார்.