தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் மலையக மக்கள்

ஆயிரம் ருபா சம்பள விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெருந்தோட்டத்துறை மக்களுடைய வாக்குகளை பெற்றுக் கொண்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பை வழங்க முடியாது என்று தெளிவாக அறிவித்திருக்கிறது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கபடுமென மீண்டும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு தடவைகள் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ள போதும் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று விஜித்த ஹேரத் தெரிவித்தார்.