இரா சம்பந்தனின் கடிதத்தை பிரதமர் பெற்றுக்கொண்டார் ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை தொடர்பாக அறிவிக்கும் தொலைகாணொளி ஊடான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனை அரசாங்கத்தின் பேச்சாளர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையே அரசியல் கைதிகள் என கூறமுடியும்.

உதாரணமாக சிங்கப்பூரில் கமியூனிஷ்ட கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர் கமியூனிஷ்ட நிலைப்பாட்டை கொண்டவர்கள் மற்றும் கமியூனிஷ அரசியலுக்கு ஆதரவளிக்கின்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறானவர்களையே அரசியல் கைதிகள் என கூறமுடியும்.

அத்துடன் தமிழர்கள் என்ற அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

எனவே தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை.

அரசியல் நிலைப்பாடுகளுக்காக எவரும் கைது செய்யப்படாமையினால் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை.

பயங்கரவாத செற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இருக்க முடியும்.

தண்டனை கோவையில் குறிப்பிடப்படுகின்ற குற்றங்களை மேற்கொண்டவர்கள் இருக்க முடியும்.

அதேபோன்று போதை பொருள் உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதிகள் இருக்க முடியும்.

கைதிகள் பாலினம், வயது, மேற்கொண்ட குற்றங்கள் மற்றும் தண்டனை காலம் என்பவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றனர்.

எனினும் இனங்களின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

அத்துடன் தற்போது கூறப்படுகின்ற வகையில் 80 கைதிகள் இருப்பார்களாயின் அவர்களில் ஒருவரின் பெயர் மற்றும் அவரது இலக்கத்தை குறிப்பிட்டால் அவ்வாறு ஒருவர் இருக்கின்றாரா? என எமது சிறைச்சாலைகளில் தேடி பார்க்க முடியும் என  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் அண்மையில் அரசாங்கத்திலுள்ள சில சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிடம் முன்வைத்த கடிதம் தொடர்பில் வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில பிரதமரிடம் தமக்கான பிரச்சனைகள் தொடர்பில் வழங்கப்படும் கடிதங்களை அவர் பெற்றுக் கொள்வார்.

பின்னர் குறித்த கடிதம் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டு அதிலுள்ள விடயங்களின் உண்மை தன்மை மற்றும் அவற்றை செயற்படுத்த முடியுமா? என ஆராயப்படும்.

எனவே பிரதமர் குறித்த கடிதத்தை பெற்றுக் கொண்டமைக்காக அதிலுள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டதாக கூறமுடியாது எனவும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கமைய பிரதமரினால் குறித்த கடிதம்; விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து அதில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் கைதிகள் எவரும் இல்லை எனவும் அவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் என்ற ரீதியில் தாம் பொறுப்புடன் கூறிக் கொள்வதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில் சிறைச்சாலைகளில் கைதிகள் உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அவர்களின் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வழக்கு விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றகளே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சில கைதிகள் 20 வருடங்களுக்கு அதிக காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் சட்டபின்புலத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சம்பந்தன் போன்றோர் குறித்த கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுப்பதை விடுத்து சட்டத்தை மாற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை கொண்டு வந்திருக்க முடியும்.

எனவே சட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காரணமாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அதனை மாற்றுவதற்கு 15 முதல் 20 வருடங்கள் என்ற அதிக காலம் சென்றிருக்காது.

தமது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்களை உபயோகிக்கின்றனர்.

அந்த அடிப்படையில் அவர்களை அரசியல் கைதிகள் என்று கூற முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.