தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 10 பேர் கைது

அனுராதபுரம் – இபலோகம விஜிதபுற கோட்டை இருந்ததாக கருதப்படும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.

பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால், அங்கிருந்த தொல்பொருள் பகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அழகப்பெருமாகமயில் உள்ள பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக இந்த மதில் கட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை அண்மித்தே பெலும்கல என்ற தொல்பொருள் பூமி உள்ளநிலலையில், 2018 ஆம் ஆண்டில் அது தகர்க்கப்பட்டது.

இந்தநிலையில் தொல்பொருள் தொகுதிக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்றையதினம் 10 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களுள் பள்ளிவாசலின் தலைவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.