ம.ம.மு வரலாற்று தோல்வியை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது?

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்று எம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். அது மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைமைக்கு அச்சொட்டாய் பொறுந்தியிருக்கிறது என அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடிய மலையக மக்கள் முன்னணி, வரலாற்று தோல்வியை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது என்றும் அனுஷா சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னணியின் தற்போதைய நிலை குறித்து தன்னுடன் கலந்துரையாடிய ஆதரவாளர்களிடமே அனுஷா சந்திரசேகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரான அமரர். சந்திரசேகரனின் காலப் பகுதியில் தனக்கு கிடைத்த ஒரு பாராளுமன்ற ஆசனத்தின் மூலம் இலங்கையின் ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தார். பிரதி அமைச்சு பதவியையும் பெற்று அதன்மூலம் எம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தன்னாலான அனைத்து வழிகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

அன்றைய காலகட்டத்தில் அமரர். சந்திரசேகரனது மக்கள் மீதான அதீத பற்றும், எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கான தூர நோக்குடைய சிந்தனைகளும், கற்றறிந்தவர்கள் புத்திஜீவிகள் என அனைவரது கருத்துகளை செவிமடுத்து உள்வாங்கும் திறனும் இருந்ததாலேயே பிற்காலத்தில் அவரால் ஒரு கெபினட் அமைச்சராகி இறக்கும் வரையிலும் தன்னாலான அனைத்து வழிகளிலும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.

குறுகிய ஆயுள் கொண்டிருந்தாலும் அவரால் மிக நீண்டதொரு அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடிந்தது. இன்றும் அவரை போற்றும் மக்களே அவரது சேவைகளுக்கான சாட்சி. ஆனால் இன்றைய மலையக மக்கள் முன்னணியின் நிலை என்ன! அதன் போக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பவர்களுக்கு பார்த்த மாத்திரத்தில் புரிந்துவிடும்.

மலையக மக்கள் முன்னணியின் இப்போதிருக்கும் தலைமைக்கு மக்களை பற்றிய சிந்தனை துளியும் இல்லை, தேசிய அரசியல் நீரோட்டம் எவ்வாறு அமைந்திருக்கிறது எனதை புரிந்துகொள்ளும் அரசியல் ஞானமும் இல்லை, அருகில் புத்திஜீவிகளும் இல்லை (வைத்துக் கொள்வதுமில்லை), தப்பித்தவறி ஒன்று இரண்டு பேர் மக்கள் சம்பந்தமாக ஏதாவது கருத்துக்களை முன்வைத்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்று எம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். அது மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைமைக்கு அச்சொட்டாய் பொறுந்தியிருக்கிறது போலும், ஏனெனில் இராஜாங்க அமைச்சிலிருந்து அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகி இன்று வெறும் பாராளுமன்ற உறுப்பினர் அளவுக்கு வந்து நிற்பதை பார்க்கும்போது இவர்கள் எந்தளவுக்கு அரசியல் வரட்சி நிலையில் இருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக புரிகிறது.

வெறுமனே கூட்டணி என்ற மாயவலைக்குள் சிக்கி தனது தனித்துவத்தையும் இழந்து பதவியையும் இழந்த அவமானப்பட்டு நிற்கும் இந்த நிலையில் இவர்கள் இனியும் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய போகிறார்கள்? மாதாமாதம் தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது தொழில் பிரச்சினைகளை பார்ப்பதில்லை. தொழிற்சங்க காரியாலயங்கள் என சிலதை பெயருக்கு வைத்திருக்கிறார்கள், ஆனால் அவற்றை திறப்பதுமில்லை.

கடந்த தேர்தலின் போது தற்போதைய அரசாங்கத்தை எவ்வாறெல்லாம் விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு விமர்சித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிராக தான் வாக்குகளை சேகரித்தார்கள், மக்களும் வாக்களித்தார்கள், ஆக இவர்கள் தன்மானமுள்ளவர்கள், உண்மையான கொள்கைவாதிகள் என்றால் வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், இவர்கள் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்போதைய அரசாங்கத்திடம் மண்டியிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள் வேண்டாம், தனித்துவமிழந்த இவர்களுடன் இனியும் பயணிக்க முடியாது என்பதைதான் கடந்த தேர்தலில் எந்தவொரு தேசிய கட்சியையோ, தொழிற்சங்க பலமுமோ இன்றி எம்முடன் இணைந்த 17,107 பேர் வலியுறுத்தியிருக்கிறார்கள். கடந்த அரசாங்கமாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியையும் பின் தள்ளி மலையகத்தில் மூன்றாம் சக்தியாக நாம் உருவெடுக்க ஆதரவளித்திருக்கிறார்கள்.

எம் மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றம், இவர்களது அரசியல் தாகம் என்பதை நாம் புரிந்து எம் மக்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். அதற்காக நாம் நீண்டகால திட்டங்களை வகுத்து அர்ப்பணிப்புடன் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது என தெரிவித்தார்.