சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பயங்கரவாதி சஹரான் ஹசீம் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு அந்நாட்களில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி இருந்தபோதும், சஹ்ரான் தொடர்பாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல் எதுவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சாட்சி வழங்கினர்.

இதன்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அந்நாட்களில் சட்ட மா அதிபர் இந்தவிடயம் தொடர்பாக எந்தவிடயத்தையும் அறிந்திருக்கவில்லை என்று சட்ட மா அதிபரின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகங்களான அசாத் நவாவி மற்றும் அரச சட்டவாதி மாலிக் அசீஸ் ஆகியோர் இன்று இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினர்.

இதன்போது, ஆணைக்குழுவின் தலைவர், ஈஈஆர்.08.2017 என்ற கடிதம் தொடர்பாக அரச சட்டவாதி மாலிக் அசீசிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த கடிதத்தை ஆராய்ந்ததில், சட்ட ஆலோசனை வழங்கும் அளவுக்கு அந்த கடிதத்தில் உள்ளடக்கங்கள் எதுவும் இல்லை என்று அரச சட்டவாதி பதில் வழங்கினார்.