மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அசாதாரணக் காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய சுகாதார சேவைகளுக்காக விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதற்கமைய சூறாவளியின் போது அல்லது அதற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தேவைகளுக்காக 070 222 222 7 அல்லது 076 1616 133 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 026 3135 888 என்ற இலக்கத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 070 6000 631 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்த முடியுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹாம்பத் இதனை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாணத்தில் நிலவக்கூடிய அசாதாரண காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.