வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இளைஞர்களுக்கு சலுகை கட்டணம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இளைஞர்களுக்கு சலுகை கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆவணங்களுக்கு அமைவாக வருடாந்தம் நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்வோரின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமாகும். இதில் 20 சதவீதமனோர் மத்தள விமான நிலையத்தை அடுத்துள்ள 9 மாவட்டங்களில் இருந்து செல்வோரென மதிப்பிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை அம்பாறை, இரத்தினபுரி, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களே இவை ஆகும். இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இதற்கமைவாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றின் காரணமாக தற்பொழுது மூடப்பட்டுள்ள விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோரின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களம்