கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்

கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் இன்றையதினம் 368 பேர் கொவிட் 19ல் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த நோயில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் 220 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் இதுவரையில் 19 ஆயிரத்து 61 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தகவல்படி, தற்போது 5 ஆயிரத்து 517 பேர் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் இதுவரையில் 73 பேர் கொவிட் 19 நோயின் காரணமாக மரணித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், 19 கடற்படையினருக்கும் கொவிட் 19 தொற்றி இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் வெல்லம்பிட்டிய பாதுகாப்பு முகாமில் ஒருவர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த முகாம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் 19 அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகள் சம்மந்தமான தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணாண்டோ கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் கொவிட்19 நோய்த்தொற்று வேகமாக பரவுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லாத பட்சத்தில் கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கும் இந்த நோய் பரவுவதை தடுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

x