தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பம்

மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக சகல அரச பாடசாலைகளிலும், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தரம் 1 முதல் 5 வரையான பாடசாலைகளும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களின் சுகாதார தன்மையை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் அவர்களை பாடசாலைக்கு அனுமதிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தரம் 6 முதல் 11 வரையான மாணவர்கள் பயிலும் பாடசாலைகள் 6 ஆயிரத்து 257 காணப்படுகின்றன.
அத்துடன் 12 மற்றும் 13 ஆம் தர வகுப்புகள் உள்ள 2 ஆயிரத்து 898 பாடசாலைகள் உள்ளன.
இதற்கமைய பாடசாலைகள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கற்றல் செயற்பாடுகளை பின்பற்றுவதற்கு பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இதற்கிடையில், சாதாரணதர பரீட்சைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

x