“கறுவாத்தோட்ட விபத்திற்கு நான் காரணமல்ல” இளம் பெண் பதில்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பொறுப்பற்ற முறையில் அதிசொகுசு ஜீப் ரக வாகனத்தில் பயணித்து விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் மற்றும் இன்னுமொரு நபரை கறுவாத்தோட்டை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து நேற்று பிற்கபல் தாமரைத் தடாகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகத்துடன் பயணித்த குறித்த ஜீப் ரக வாகனமானது மகிழூர்தி விற்பனை நிலையமொன்றின் மீது மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறித்த மகிழூர்தி காட்சியகத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த ஒரு இளம் பெண் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. குறித்த பெண்தான் விபத்தை ஏற்படுத்திய நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த விபத்தானது தனது நண்பரினாலேயே ஏற்படுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் அவருக்கு உதவுவதற்காகவே தான் அங்கு வந்ததாகவும் சிரேஷ்ட காவற்துறை அதிகாரியின் மகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விளக்கமான பதிவொன்றையும் அவர் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

x