அட்டுளுகம சம்பவம் – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர் என்பதால் அவரை சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் நேற்றைய தினம் (09) தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் 5 பேரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.