ஆனமடுவை விபத்து பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றை தமது வாகனத்தில் விரட்டிச் சென்ற ஆனமடுவை காவற்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தொடர்வதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

ஆனமடுவை – கொட்டுகச்சி பகுதியில் இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கால்நடைகள் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய அவர் தமது வாகனத்தில் குறித்த பாரவூர்தியை விரட்டிச் சென்ற வேளையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவரது வாகனம் மின்சார கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளனது.

நிக்கரவரட்டிய – இஹலகம பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மனைவி உப காவல்துறை பரிசோதகர் என்பதோடு விபத்தில் காயமடைந்த, சிறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி ஆனமுடுவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும், சிறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் சாட்சியம் பெறப்படவுள்ளதோடு குறித்த பாரவூர்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தப்பி சென்ற பாரவூர்தியை தேடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

x