கொரோனாவினால் நேற்றைய தினமே அதிக மரணங்கள் பதிவாகின முழுமையான விபரங்கள்

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றில் அதிகமான மரணங்கள் நேற்று பதிவாகின.

நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி மூன்று மரணங்கள் பதிவாகின.

இந்த நிலையில், நேற்றைய தினம் 5 மரணங்கள் பதிவாகியமையானது, நாட்டில் நாளொன்றில் அதிகளவான மரணங்கள் பதிவான தினமாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணித்த 5 பேரில், மூன்று பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு – 02 ஐ சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர், பிம்புற ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டு, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – 12 ஐ சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், தமது வீட்டில் மரணித்தார்.

சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பே அவரின் மரணத்திற்கு காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு – 14 ஐ சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் தமது வீட்டில் உயிரிழந்தார்.

சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று அவரின் மரணத்திற்கு காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – 15 பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர் தமது வீட்டில் வைத்து உயிரிழந்தார்.

சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட இருதய பாதிப்பு அவரின் மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த நாட்களில் சிலர் வீடுகளிலே மரணித்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு, சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின், சமுதாய வைத்திய நிபுணர் ஷெரின் மெனுவேல்பிள்ளை பாலசிங்கத்திடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய ஆலோசனை கோவை ஒன்றை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

x