ஊரடங்கு சட்டத்தை முன்கொண்டு செல்லும் எதிர்பார்ப்பு இல்லை

மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஹிரு டிவியில் இன்று காலை ஒளிபரப்பான பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை முன்கொண்டு செல்லும் எதிர்பார்ப்பு இல்லை என்ற விடயத்தை ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

எனவே மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் 10 நாட்களை உச்சபட்சமாக பயன்படுத்தி நோயாளர்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம்கண்டு அந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி கூடுமானவரையில் மேல் மாகாணத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

அதேநேரம் பொதுமக்களும் இந்த விடயங்களை உணர்ந்து சுகாதார அறிவுறுத்தல்களை உயரிய முறையில் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்இ ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போது 18 வாகனங்களும் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் முகக்கவசங்கள் இன்றி சமூக இடைவெளியை பேணாமல் செயற்பட்ட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x