ஞானசார தேரரின் வாக்குமூலத்தை தொலைபேசியில் பதிவு செய்த மௌலவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்கி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பதில் செயலாளர் அதனை தனது தொலைபேசியில் பதிவு செய்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்குவதற்காக வருகை தந்திருந்தார்.

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை உட்பட 10 குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சாட்சி விசாரணை இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட சுமார் 2 மணி நேரங்கள் கடந்த பின்னர் ஆணைக்குழுவினுள் இருந்த நபர் ஒருவரின் சந்தேககத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக அவர் வௌியேற்றப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஆணைக்குழுவில் ஞானசார தேரர் சாட்சி வழங்கியதை தொலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பதில் செயலாளரான தெமடகொட பகுதியை சேர்ந்த மர்ஸிட் எனம் நபரே இவ்வாறு சாட்சி விசாரணைகளை இரகசியமாக பதிவு செய்துள்ளார்.

பலத்த பாதுகாப்பின் கீழ் இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் வௌி நபர்களுக்கு தொலைபேசி எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சட்டத்தரணி ஊடாக அவர் தனது தொலைபேசியை எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் சார்ப்பில் ஆஜரான சட்டதரணிகள் தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர், உடனடியாக குறித்த செயலாளரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.