3 மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை ஆரம்பம்!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று முதல் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவை அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போது, ​​கொழும்பிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரமே ஒரு நாள் சேவை வழங்கப்படுகின்றது.

முதல் கட்டத்தின் கீழ், பிராந்திய அலுவலகத்தில் நேரம் மற்றும் திகதியை முன்பதிவு செய்த 100 விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இந்தச் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று நியமனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களும் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, முன் நியமனம் பெறாத விண்ணப்பதாரர்கள் சேவைகளைப் பெற அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அடுத்த 60 நாட்களுக்கான திகதிகள் மற்றும் நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

எனவே, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய 0706 311 711 என்ற எண்ணிற்கு WhatsApp அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட ஆவணங்களின் துல்லியத்தை உறுதிப்படுத்திய பின்னர் திகதிகள் மற்றும் நேரங்கள் உடனடியாக வழங்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.