இலங்கை முதலீட்டு சபை பணிப்பாளர்கள் மூவர் பதவி விலகினர்!

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மூவர் தமது பதவி விலகல் கடிதங்களை இன்று கையளித்துள்ளனர்.

பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ரால், கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் சஞ்சய குலதுங்க ஆகியோரே இவ்வாறு தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபை தலைவர் சஞ்சய மொஹொட்டாலவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மூவரும் பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளதாக முதலீட்டு சபை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்த சஞ்சய மொஹொட்டால, அந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகளே இவர்களின் பதவி விலகலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சயவுக்கு எதிராக சுமார் 850 முதலீட்டு சபை ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலீட்டு சபை ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1100ஐ நெருங்குகிறது.

முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால மற்றும் ஏனைய உறுப்பினரான ஜயமின் பெல்பொல ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை நாளை  03ம் திகதி சமர்ப்பிக்க உள்ளதாக முதலீட்டு சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.