பெண்ணை கொடூரமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

மாத்தறை – கம்புறுபிட்டிய, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவருரையும் அவரது மகனையும், காவல்துறை உத்தியோகத்தரும், அவரது மனைவியும் இணைந்து தாக்கியமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த பெண் தற்போது கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தலை மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று 02ம் திகதி மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை – கம்புறுபிட்டிய – பண்டாரவத்தை பிரதேசத்தில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண்ணும், 14 வயதுடைய அவரது மகனும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இப்பெண் வெற்றுக்காணி ஒன்றில் மலசலகூடத்துக்கான குழி வெட்டுவதற்காக சென்றபோது, குறித்த காவல்துறை உத்தியோகத்தருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கம்புறுபிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், கம்புறுபிட்டிய காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யச் சென்றபோது காவல்துறையினர் முறைப்பாடுகளை ஏற்க மறுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.