நாட்டின் பல மாகாணங்களுக்கு பலத்த மழை!

நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் தற்போது காணப்படும் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் தாழமுக்க பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன், பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும் வேளையில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.