அறுவரின் உயிர்பறித்த மிதப்புப் பாலம் விபத்து குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஆளுநர் உத்தரவு!

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணனுக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக, மாகாண பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா தலைமையில், விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விசேட காவல்துறை விசாரணையை மேற்கொள்ளுமாறும் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பான காவல்துறைமா அதிபருக்கும், ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.