பெரும்போகத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரம் – ஜனாதிபதி பணிப்பு

பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில்இ உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள்இ இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பயிர்ச் செய்கையில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ குறிப்பிட்டார். தட்டுப்பாடு இன்றி உரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மற்றும் தனியார் துறையின் இறக்குமதியாளர்களுக்கு வேண்டிய பின்புலத்தை தயார் செய்து கொடுத்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இறக்குமதியில் தங்கி இருக்காது நாட்டுக்கு தேவையான உரத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை நடத்தி இருப்பதனால் பிரதான உர வகைகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு வழங்க முடியுமென்று பெசில் ராஜபக்ஷ கூறினார்.

எப்பாவல போஸ்பேட் சார் Single superphosphate ஐ நாட்டுக்கு அவசியமான அளவில் உற்பத்தி செய்ய முடியுமென்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய உர வகைகளின் உற்பத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

உர உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அவசியமான முதலீடுகளை கமத்தொழில் அமைச்சு வழங்கும்.

கடந்த போகத்தில் 25,000 ஹெக்டெயர்கள் சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல் 30% வீதத்தை தாண்டியுள்ளதாக கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். பெரும்போகத்தில் முழு பயிர் நிலத்தில் 25% வீதத்தை சேதனப் பசளையை பயன்படுத்துவதற்கான இயலுமை பற்றி உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அதன் மூலம் இரசாயன உரப் பாவனையை இவ்வருடத்தில் 25% வீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சேதனப் பசளை பயன்பாட்டினால் பெறுகின்ற விளைச்சல் மற்றும் ஏனைய பிரதிபலன்கள் தொடர்பாக விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை தயார்படுத்தும்படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இரசாயன உரத்தின் மூலம் நீர் மற்றும் பயிர் நிலத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும், சிறுநீரக நோயினாலும் ஏனைய நோய்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கும், சுற்றாடல் சமநிலை தன்மையை பாதுகாப்பதும் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.

இரசாயன உரம் மற்றும் சேதனப் பசளை 70% மற்றும் 30% என்ற வீதத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

மரக்கறி பயிர்ச் செய்கையாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து 6 வகையான மரக்கறிகள் அடங்கிய பொதியை 350 ரூபாவிற்கு கொழும்பு மாவட்டத்தில் 10 இடங்களில் இன்று வெற்றிகரமாக விற்பனை செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாத்துஇ கமத்தொழில் அமைச்சு மற்றும் துறைசார் அமைச்சுக்கள் ஒன்றிணைந்து நேரடியாக நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.