அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

கொவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று 22 ஆம் திகதி  முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் பல கட்டங்களாக மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன்படி முதற்கட்டமாக, 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதன்பின்னர், இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு வகுப்புகளும் கடந்த மாதம் 25ஆம் திகதி திறக்கப்பட்டன.

இதனையடுத்து, மூன்றாம் கட்டமாக அனைத்துப் பாடசாலைகளினதும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்தநிலையில், இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரம் 06, 07, 08 மற்றும் 09 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு கடந்த வாரம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இன்று நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமாகின்றன.