கொத்து ரொட்டியினால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலி!

வத்தேகம பிரதேசத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் கொத்து ரொட்டியினால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞர் கொத்து ரொட்டியை கொள்வனவு செய்வதற்காக நேற்று இரவு சிற்றுண்டிச்சாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அதன் உரிமையாளருக்கும், குறித்த இளைஞருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமது வீட்டுக்குச் சென்ற இளைஞர், கூரிய ஆயுதமொன்றுடன் மீண்டும் சிற்றுண்டிச்சாலைக்கு திரும்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேற்படி இளைஞர், சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரைத் தாக்க முயற்சித்தபோது, அருகிலிருந்த உரிமையாளரின் மகன், உலக்கையால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வத்தேகம – கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.