கொஸ்லாந்தை – மீரியபெத்தை மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 7 வருடங்கள்

கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளன.

மீரியபெத்த பகுதியில் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி, 34 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், பலர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று ஹப்புத்தளை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொஸ்லாந்தை மீரியபெத்த – கல்கந்த. பட்டரத்மலை ஆகிய பெருந்தோட்டப்பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஹப்புதளை கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து ஹப்புத்தளை பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக் கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதேவேளை, அக்கரபத்தனை டயகம மேற்கு 3 ஆம் பிரிவு பகுதியில் உள்ள 7 ஆம் இலக்க நெடுங்குடியிருப்பு தாழ் இறங்கியுள்ளது.

அத்துடன், கடந்த தினத்தில், குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனினும், இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.