புதையல் தோண்டிய 12 பேர் கைது

தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த வாகனம் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, குளியாப்பிட்டி, குருநாகல், ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திருகோணமலை – மகாவலி வடக்கு வனப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்குமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் கந்தளாய் மற்றும் கொட்டியாகும்புர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.