பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1,235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1,235 வீடுகள் இன்று  பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாகத் தொலைக்காணொளி ஊடாக இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதற்கிணங்க பிரதான நிகழ்வுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை ஆகிய பகுதியில் 267 வீடுகளும் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டதுடன் வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.