தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி

புதிய களனிப் பாலத்திலிருந்து இராஜகிரிய ஊடாக வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய இடைமாறல் வரைக்குமான தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் திட்டமிட்டு, நிர்மாணித்து, நிதி வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் (DBFOT) M/s China Harbour Engineering Corporation இற்கு வழங்குவதற்கு 2021.05.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 03 வருடங்களில் குறித்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள நெடுஞ்சாலையின் தரம் மற்றும் குறித்த காலப்பகுதியில் நிர்மாணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பு வேலைகளைக் கண்காணிப்பதற்காக சுயாதீன பொறியியலாளர் ஒருவரைக் கொண்ட ஆலோசனை நிறுவனமொன்று தாபிக்கப்பட வேண்டியுள்ளது.

குறித்த ஆலோசனை நிறுவனத்தின் சேவை வழங்குநராக வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்படல் வேண்டும். அதற்கமைய, அதற்கான முறையான பெறுகையைக் கையாண்டு பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.