ஜனாதிபதி செயலாளரின் விசேட அறிவிப்பு

மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின் ஐந்தாவது பிரிவின் அடிப்படையில், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பூரண அதிகாரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உரித்தாவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

நெல், அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வியாபாரிகளின் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு ஆணை சட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான கட்டாய விதிமுறைகளை அமுல்படுத்தினார்.

அவ்விதிமுறைகளை செயற்படுத்தி நெல், அரிசி, சீனி உட்பட நுகர்வுப் பொருட்களை பகிர்ந்தளிப்பதை ஒருங்கிணைப்பதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமித்தார்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலை அல்லது இறக்குமதி விலையினை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு சாதாரண விலையில் விற்பனை செய்வதற்காக அதிகாரிகளை கொண்டு நடாத்துவதற்கும், மொத்த கொள்முதலுக்காக அரச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள், கடன் உரிமையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு ஆணை சட்டத்தில் இரண்டாவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பான அவசரகால ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்பட்டன.