5,400 மெட்ரிக் டொன் சீனி பதுக்கி வைப்பு- களஞ்சிய சாலைகளுக்கு சீல்

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகளில், சுமார் 8000 மெட்ரிக் டொன் நெல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததனால், குறித்த களஞ்சியசாலைகள் கடந்த வாரத்தில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்குள் கம்பஹா மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள மூன்று சீனி களஞ்சியசாலைகளில் கிட்டத்தட்ட 5,400 மெட்ரிக் டொன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததனால் குறித்த களஞ்சிய சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு எதிராக, இந்த வாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு 1,000 ரூபா முதல் 10,000 ரூபா வரை அபராதமும், நிறுவனத்துக்கு 10,000 ரூபா முதல் 1,000,000 ரூபா வரை அபராதம், அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.