அடையாளம் காணப்படாமல் 5 மடங்கு கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதாக தகவல்

தற்போது பீ.சி.ஆர் உள்ளிட்ட பரிசோதனைகளின் ஊடாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களை விட 5 மடங்கு அதிகமான கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தவறான அணுகுமுறை காரணமாக 80 வீதம் எதிர்மறையான விளைவுகளே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பரிசோதனைகளின் ஊடாக கண்டறியும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 15.8 சதவீதம் மட்டுமே ஆகுமெனவும், இதைவிட 5 மடங்கு அதிகமான கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நோயாளர்களை கண்டறிய முடியாத காரணத்தால் 5 சதவீதத்திற்கு குறைவானவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கும் முன்பே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோயியல் நிபுணர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதிக்கு தவறான பாதையை காட்டி வருவதாகவும், சுகாதார அமைச்சின் தவறான கொள்கைகளால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்தால் சமாளிக்க முடியாமல் போகுமெனவும் அவர் தெரிவித்தார்.