கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்கான முன்னோடி ஊசி தொடர்பில் வெளியான செய்தி

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்கான முன்னோடி ஊசி மருந்தான ரெம்டேசிவியர் செயலூக்கத்தை கொண்டதாக இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சர்வதேசத்தை தாக்கிய போது, அதனை ஒழிப்பதற்கான ஊசி மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு ரெம்டேசிவியர் உட்பட நான்கு உற்பத்தியாளர்கள் மெச்ச தக்க வகையில் சிறப்பான வகையில் முன்னேற்ற பாதையில் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியமான ஊசி மருந்துகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

ரெம்டேசிவியர் மருந்து பிரயோகிக்கப்பட்ட ஒரு சிலரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை ஏற்றுக்கொள்ள முடியாது என ரெம்டேசிவியர்  உற்பத்தி நிறுவனம் கில்ட்  தெரிவித்துள்ளது.

அவர்களினால் வெளியிடப்பட்ட ஆய்வு குறித்த கருத்து மீள் பரிசீலனை செய்வதன் அவசியம் குறித்தும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட நான்கு மருந்து உற்பத்திகளும் 30 நாடுகளில் உள்ள 500 இற்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் 11 ஆயிரத்து 266 நோயாளர்களுக்கு பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.