சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் வளர்க்கப்படும் நீர்த்தொட்டியில் வீழ்ந்த இளைஞர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
மெத்தேதென்ன வத்தை, வேவெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இறால் வளர்க்கப்படும் தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமை இரவு குறித்த இறால் வளர்க்கப்படும் இறால் பண்ணையில் உள்ள தொட்டியில் வீழ்ந்த அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி சிலாபம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்த சிலாபம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.