பொதுப்போக்குவரத்து இடைநிறுத்தம்: நிறுவன பிரதானிகள் கோரினால் சேவை வழங்க தயார்

நாடு முழுவதும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

நேற்றிரவு 10மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள், என்பனவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள காலப்பகுதியில் முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்தகங்களை திறந்திருக்க முடியும்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணியின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் தொழில் நடவடிக்கைகளுக்காக செல்பவர்கள் விசேட அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளுதல் அத்தியாவசியமானதில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியிலும் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் நாட்டின் சகல வீதி அபிவிருந்தி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தடையின்றி தங்களது பணிகளை தொடர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.