நாட்டை முடக்க தொழிற்சங்கங்கள் தயார்- அறிவிப்பு வெளியானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பலவந்தமாக நாட்டை மூடச்செய்வோம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதியான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை நாங்களாவே மூடிக்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் நாட்டை முழுமையாக முடக்குமாறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையெடுக்காது மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகின்றனர் என்று சமரசிங்க கூறியுள்ளார்.

இதனால் மக்களின் உயிரை காப்பதற்காக நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது கடமைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.