கரையோரப் பாதை நிர்மாணப் பணிகளுக்கான செலவு

கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மிகவும் பொருத்தமான மாற்றுவழியாக அடையாளங் காணப்பட்டுள்ள கரையோரப் பாதையின்(மெரைன் டிரைவ்) இரு புதிய பகுதிகளான கொள்ளுபிட்டியில் இருந்து ஸ்டுவட் பிளேஸ் வரையான வீதி மற்றும் வெள்ளவத்தையில் இருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரையான வீதி என்பவற்றின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கரையோர வீதி நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலையை ஆராய்வதற்காக நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று  அமைச்சரின் தலைமையில் மற்றும் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பொறியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நான்கு வழிப் பாதையுடன் கூடிய கொள்ளுபிட்டியில் இருந்து ஸ்டுவட் பிளேஸ் வரையான 600 மீட்டர் வீதி நிர்மாணப்பணிகளுக்கு 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதோடு நான்கு வழிப்பாதையுடன் கூடிய வெள்ளவத்தையிலிருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரையான 1.2 கிலோ மீட்டர் வீதிக்கு 420 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முழுமையான கரையோர பாதை ஸ்டுவட் பிளேஸிற்கு அருகில் இருந்து கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கல்கிஸ்ஸ ஊடாக தெஹிவளை வரையான பாதை 7.8 கிலோ மீட்டர்களை கொண்டதாகும். இந்தப் பாதையின் இரு மருங்கிலும் NDB வங்கியின் அனுசரணையுடன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வீதியின் இருபுறமும் நடைபாதை அமைத்தல், வீதி சமிக்ஞை பலகை நிர்மாணித்தல், வீதி சமிக்ஞை விளக்குகள் அமைத்தல், வடிகால் அமைத்தல், தரிப்பிட வசதி மற்றும் தெருவிளக்குகள் இடல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களில் கரையோர பாதையின் வெள்ளவத்தையிலிருந்து தெஹிவளை ரயில் நிலையம் மற்றும் கொள்ளுப்பிட்டியிலிருந்து ஸ்டுவட் பிளேஸ் வரை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பாதை வானிலிருந்து தென்படும் தோற்றத்தை காணலாம்.